பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 341 கிலோ மீட்டர் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி, விமானப்படை விமானத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் செழிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
3 ஆண்டுகளுக்கு முன்பு பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும்போது, நான் இங்கு ஒரு நாள் விமானத்தில் தரையிறங்குவேன் என்று நான் நினைக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தின் திறன்கள் மற்றும் உத்தரப்பிரதேச மக்களின் திறன்கள் மீது சந்தேகம் உள்ளவர்கள் இன்று சுல்தான்பூருக்கு வந்து அவர்களின் திறனைப் பார்க்க வேண்டும். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிலப்பரப்பாக இருந்த இடத்தில், இப்போது நவீன அதிவேக நெடுஞ்சாலை வந்துள்ளது.
நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு, நாட்டின் சீரான வளர்ச்சி முக்கியமானது. வளர்ச்சிப் பந்தயத்தில் சில பகுதிகள் முன்னேறுவதும், சில பகுதிகள் பல தசாப்தங்களாக பின்தங்குவதும் எந்தவொரு நாட்டிற்கும் சரியானதல்ல. நாட்டின் செழிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அவசரக்கால சூழ்நிலைகளில் இந்திய விமானப் படைக்கு மேலும் ஒரு சக்தியாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7-8 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். உ.பி.யை சிலர் எதற்காகத் தண்டிக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனவே 2014 ஆம் ஆண்டில், இந்த மகத்தான தேசத்திற்குச் சேவை செய்ய நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தபோது, உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கான நுணுக்கங்களை அதன் எம்.பி மற்றும் பிரதமர் என்ற முறையில் நான் பார்க்க ஆரம்பித்தேன். உத்தரப்பிரதேசத்திற்குப் பல திட்டங்களைத் துவக்கினேன். ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டன. பெண்கள் வெளியில் செல்லத் தேவையில்லாத வகையில் அவர்களின் வீடுகளில் கழிப்பறைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டன.
ஆனால், அப்போதைய உத்தரப்பிரதேச அரசு ஒத்துழைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. பொதுவெளியில் என் பக்கத்தில் நின்று தங்கள் வாக்கு வங்கியைச் சீர்குலைத்துக் கொண்டுவிடுவோமோ என்ற பயமும் அவர்களுக்கு இருந்தது. நான் எம்.பி.யாக வரும்போது, விமான நிலையத்தில் என்னை வரவேற்ற பிறகு அவர்கள் காணாமல் போனார்கள். தாங்கள் செய்த பணி என்று காட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்கள் வெட்கப்பட்டார்கள். யோகிக்கு முந்தைய அரசு உத்தரப்பிரதேச மக்களுக்கு அநீதி இழைத்தது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசிய பிறகு,பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் 3.2 கிலோமீட்டர் நீள அவசரக் கால தரையிறங்கும் களத்தில் போர் விமானம் தரையிறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.