இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் (வயது 98). இவருக்கு நேற்று முன்தினம் காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், இரவு 7.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அர்ஜன் சிங்கின் உடல் நேற்று காலை ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி கவுடில்யா மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அர்ஜன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து, முப்படை தளபதிகளான பைரேந்தர் சிங் தனோவா (விமானப்படை), சுனில் லன்பா (கடற்படை) மற்றும் பிபின் ராவத் (ராணுவப்படை) ஆகியோர் அர்ஜன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அர்ஜன் சிங் இறுதிச் சடங்கு இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பிரார் சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடக்கிறது. அர்ஜன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.