கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக டெல்லியில் மாட்டுச் சிறுநீர் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,37,702 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 85 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், கரோனா பரவலைப் பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு டெல்லியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் மாட்டுச் சிறுநீர் குடிக்கும் விருந்தை நடத்தியுள்ளது.
டெல்லி மந்திர் மார்க் பகுதியில் அமைந்துள்ள அவ்வமைப்பின் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாட்டுச் சிறுநீர் குடித்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஓம் பிரகாஷ் என்பவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டுச் சிறுநீர் குடித்து வருகிறோம். நாங்கள் சாணத்திலும் குளிக்கிறோம். ஆங்கில மருந்தை உட்கொள்ள வேண்டிய அவசியம் இதுவரை எங்களுக்கு வந்ததில்லை" எனத் தெரிவித்தார்.