
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷி சிசோடியா உள்ளிட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதே வேளையில் டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த மூன்று நாட்களுக்குள், டெல்லியில் மின்வெட்டு அதிகமாக இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிஷி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அகற்றிய மூன்று நாட்களுக்குள், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளது.
மக்கள் இப்போது இன்வெர்ட்டர்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ், மின்சாரத் துறை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இது இப்போது பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குள் சரிந்துவிட்டது. பாஜகவுக்கு எப்படி ஆட்சி செய்வது என்று தெரியவில்லை. அவர்கள், உத்தரபிரதேசத்தைப் போலவே டெல்லியிலும் நீண்ட நேரம் மின்சாரம் தடைபடும் சூழ்நிலையை உருவாக்குவார்கள்” என்று கூறினார்.