நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.
இதனையொட்டி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்து ஒப்புதலை பெற்றார்.
அதே சமயம் பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.