மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்கு கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் விவசாயப் பிரதிநிதிகள் மேற்கொண்ட ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போராட்டத்தைத் தொடர விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதேபோல், மத்திய அரசு கால அவகாசம் வேண்டும் எனக் கோரிய நிலையில், அடுத்தகட்டப் பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.