கடந்த செவ்வாய்கிழமை அன்று, "அகில் பாரத்திய கிஷான் சபா" தலைமையிலான 30,000 விவசாயிகள் மும்பையை நோக்கி தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி பேரணியாக அணிவகுத்து நடக்கின்றனர். விவசாயிகளின் இந்த அணிவகுப்பு செவ்வாயன்று நாசிக்கில் தொடங்கி, வியாழன் அன்று தானே மாவட்டத்தை அடைந்தது. மும்பையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேர இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இப்போராட்டம் அந்த மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி கொடுக்கும், ஏனெனில் சட்டமன்ற பட்ஜெட் தற்போது அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால் விவசாயிகளின் இந்த போராட்டம் அவர்களுக்கு ஒரு கெடுபிடியை கொடுக்கும் என்கின்றனர்.
விவசாய நெருக்கடியாலும், இயற்கையால் ஏற்பட்ட அழிவினாலும் போராடிவரும் மஹாராஷ்டிரா விவசாயிகள், தங்களது கோரிக்கைகளாக கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல்வர் பத்னாவிஸ் அறிவித்தது போலவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கின்றனர். இதனுடன் சுவாமிநாதன் கமிஷனையும் செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
"ஏற்கனவே இந்த அரசு எங்களது கோரிக்கையான விவசாய தள்ளுபடி கடனை ஏற்றுக்கொண்டிருந்தாலும் 1,753 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர், காரணம் அரசின் மோசமான செயல்பாட்டால்தான் இது நடந்திருக்கிறது. அதனால்தான் இந்த 30,000 விவசாயிகள் கிளர்ச்சி கொண்டு தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்" என்று ஏ.பி.கே.எஸ். இன் பொதுச்செயலாளர் அஜித் நாவலே கூறுகிறார்.
மேலும் இச்சங்கத்தின் கோரிக்கையாக, "விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு நாற்பதாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவேண்டும், கடந்த மாதம் பருவமழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு ஈடாக இது இருக்கும்" என்று நாவலே கூறுகிறார்.
இதே போன்று இந்த மாதத்தில் மட்டும் மஹாராஷ்டிரா அரசை கண்டித்து பல விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளன. இனி போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.