மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், கடந்த வருட இறுதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி எல்லைகளில் முகாமிட்டு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை வீடு திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
இந்தநிலையில் நொய்டாவில் வசித்து வரும் மோனிக்கா அகர்வால், சாலையில் விவசாயிகள் போராடுவதால், தினசரி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் காலவரையின்றி சாலைகளை அடைத்து வைத்திருக்க கூடாது. எந்த வகையிலும் போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாலைகள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடாது. சாலைகளில் செல்ல மக்களுக்கு உரிமை உண்டு எனவே அதை தடுக்க முடியாது" என கூறினார்.
பின்னர் இந்த வழக்கில், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு விவசாய சங்கங்களுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.