மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதற்கிடையே உத்தரகாண்டில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான பாஜகவைச் சேர்ந்த திராத் சிங் ராவத், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது முதல்வர் பதவியைத் தொடர ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த நிலையில், உத்தரகாண்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில், மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் நிலவி வருகிறது. மம்தாவும் "மேற்குவங்கத்தில் கரோனா நிலை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இடைத்தேர்தலைக் கண்டிப்பாக நடத்த வேண்டும்" எனத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.
இந்தநிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் மற்றும் பபானிபூர் ஆகிய தொகுதிகளுக்கும், ஒடிசாவில் பிப்லி தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 34சட்டமன்றத் தொகுதிகளும், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளும் காலியாக இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவசரநிலையையும், மேற்கு வங்கத்தின் சிறப்புக் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு பபானிபூரில் தேர்தலை நடத்துவதாக இந்தியா தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பபானிபூர் தொகுதியில் இந்த முறை திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர், மம்தா பானர்ஜி அங்கு போட்டியிட வசதியாக தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்தா ஏற்கனவே பபானிபூரில் இருந்து இரண்டுமுறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மம்தா மீண்டும் மம்தா அத்தொகுதியில் களமிறங்குவது உறுதியான ஒன்றாகவே கருதப்படுகிறது.
மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல், செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.