ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமனற கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி (20-12-2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் இந்த புதிய சட்டத்தால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யபட்டுள்ளது. விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேவை தடை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கூறப்படுகிறது.