நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.
அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.
நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.