மகாராஷ்டிர மாநிலத்தின் 18ஆவது முதல்வராக, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே நேற்று மாலை பொறுப்பேற்றார்.
மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் உத்தவ் தாக்ரே முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் இல்லத்தை காலி செய்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திர பட்னாவிசுக்கு மகாராஷ்டிரா நீதிமன்றம் ஒன்று சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 1996 மற்றும் 1998 ஆகிய தேர்தல்களின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடரப்பட்டிருந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாக்பூர் போலீசார் தேவேந்திர பட்னாவிசின் இல்லத்திற்கு சென்று சம்மனை வழங்கினர்.