சீனர்களுக்கு இனி டெல்லியில் உள்ள விடுதிகளில் அறை வழங்கப்படாது என டெல்லி விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனாவிற்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதன்படி, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது, சீன இறக்குமதிக்குக் கூடுதல் வரிவிதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மேலும், சீனப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு ஆதரவு தரும் வகையில், அவ்வமைப்பிற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது டெல்லி விடுதி உரிமையாளர்கள் சங்கம். அக்கடிதத்தில், "சீனத் தயாரிப்புகளுக்கு எதிரான உங்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். மேலும், எங்களது உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டோம். அதேபோல இந்தியா வரும் சீனர்கள் டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது. அவர்களுக்கு அறை ஒதுக்க மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.