இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சகங்களின் அரசு உயர் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (23/04/2021) பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்
இந்த நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் இயக்குநர் கூறியதாவது, "சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்கள் மற்றும் பிபப் (BiPAP) கருவிகள் முழுமையாக செயல்படவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், “பிச்சை எடுங்கள், திருடிக் கொடுங்கள், பணம் கொடுத்து வாங்கிக் கொடுங்கள், ஏதோ செய்யுங்கள். ஆனால் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியே ஆக வேண்டும்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.