கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததது. அதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தது. அதனை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பிய கோப்புகளின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து ஜனாதிபதி ஆட்சி புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். அதேசமயம் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் மற்றும் மகன் ரமேஷ் ஆகியோர் இன்று (28/02/2021) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.