இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து இன்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால், தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லி நிர்வாக திருத்த சட்ட மசோதா கடந்த 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நடைபெற்ற போது மசோதாவிற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், டெல்லி நிர்வாக மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் 8 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேறி உள்ளது.
மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகி உள்ளன. டெல்லி அரசு அலுவலர்களின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாக டெல்லி நிர்வாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.