தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை, நவ.9 என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மிசோரம் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த ஒன்பது ஆண்டுகளில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. அங்கு இரு சமூகத்தினரும் அமர்ந்து ஒருவருக்கொருவர் இதயப்பூர்வமாக பேசினாலே பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
நான் வடகிழக்கு மாநிலங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து வருகிறேன். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்று ஒவ்வொரு மாநிலமும் விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் முழுமையான வளர்ச்சியடையாத வரை வலுவான, தன்னம்பிக்கையான இந்தியா என்ற கனவு நிறைவேறாது. மிசோரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.