மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.