அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'டவ்-தே' புயலாக உருவானது. இந்தப் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அமினி தீவுக்கு (லட்சத்தீவு) அருகே 120 கி.மீ. தொலைவிலும், கண்ணூருக்கு (கேரளா) அருகே 300 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மே 18ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும். இன்று (15/05/2021) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும். மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.