கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (Drugs Controller General of India) அதிகாரி சோமணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரியும், மருத்துவருமான சோமணி, "கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்தது. கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம். அவசர கால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்ஸியசில் பராமரிக்கலாம். கெடிலா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மூன்றாவது கட்ட சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் 100% பாதுகாப்பானது என்பதாலேயே அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டபின் காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படுவது இயல்புதான்" என்றார்.
கோவாக்சின் தடுப்பூசியை ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்து 'பாரத் பயோடெக் நிறுவனம்' தயாரிக்கிறது. அதேபோல் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டனைத் தொடர்ந்து இரண்டாவது நாடாக இந்தியா அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நிறைவடைந்த நிலையில், இரு கரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.