புதுச்சேரியில் 46 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நேற்று ஜிப்மர் மருத்துவர், அமைச்சரவை எழுத்தர் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 36 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 13 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் குருமாம்பேட்டையை சேர்ந்தவர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரியில் மொத்தமாக இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் குணமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மேலும் நான்கு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொம்பாக்கம் மதுக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவர், சென்னையில் வசிக்கும் ஒருவர் என நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு அளித்த வீடியோ பதிவில், “புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுச்சேரியில் இதுதான் முதல் முறை” என கூறினார். மேலும், ”ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் முககவசம் அணிந்து, கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசம் மூக்கை முழுதும் மூடி இருக்குமாறு அணியவேண்டும். 50 சதவீதம் பேர் அவ்வாறு அணிவதில்லை'' எனவும் எச்சரிக்கை விடுத்தார்.