Skip to main content

சுனந்தா புஷ்கர் வழக்கு - சசி தரூரை விடுவித்தது நீதிமன்றம்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

shashi tharoor - sunanda pushkar

 

கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லி லீலா பேலஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, விஷத்தின் காரணமாக சுனந்தா புஷ்கர் உயிரிழந்ததாக கூறியது.

 

இதனையடுத்து, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றி டெல்லி காவல்துறை விசாரணை நடத்திவந்தது. இதன்தொடர்ச்சியாக இந்த வழக்கில் டெல்லி காவல்துறை 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

 

இதன்பின்னர், சசிதரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலைவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை மாற்ற டெல்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்படியே இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

 

இந்தநிலையில் இன்று (18.08.2021) சிறப்பு நீதிமன்றம், சசி தரூரை சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு மோடி செய்தது என்ன?” - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Congress M.P. shashi tharoor questioned on What has Modi done for India?

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அரசியல் தலைமை குழு (பொலிட் பீரோ) அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலையும், பிப்ரவரி 14ஆம் தேதி அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலையும் திறக்க உள்ளார். அதன் பிறகு, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். எனவே, விஷயம் தெளிவாக உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் மோடி இந்திய வாக்காளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும், குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்பட்டார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வருவார் என்று கூறப்பட்டது. 

ஆனால், 2019 ஆம் ஆண்டில், பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவுகரமான நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் கதை சரிந்த நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், மோடிக்கு பொதுத் தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. அடுத்ததாக 2024ஆம் ஆண்டில், பா.ஜ.க, நரேந்திர மோடியை இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக முன்னிறுத்தும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நேரத்தில், இவை அனைத்துக்கும் சில கேள்விகள் எழுகின்றன. நீங்கள் இந்தியாவிற்கு செய்தது என்ன?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது?. சமூக-பொருளாதார ஏணியின் கீழ்மட்டத்திற்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன ஆனது?. ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தக்கூடிய வருமானம் என்ன ஆனது? இந்துத்துவத்திற்கும், மக்கள் நலனுக்கு இடையே நடக்க இருக்கும் தேர்தலில் இந்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு; 38 பேருக்கு மரண தண்டனை!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

ahmedabad

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். மருத்துவமனைகள், பேருந்துகள் என 22 இடங்களில் வெடித்த குண்டுகளினால் 56 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை.

 

இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கம், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனைத்தொடந்து இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 78 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தநிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்ட 78 பேரில் 49 பேரை குற்றவாளியாக அறிவித்தது.

 

அதனைத்தொடர்ந்து இன்று சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 49 பேருக்கும் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளில் 48 பேருக்கு 2.85 லட்சம் அபராதமும், ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் ஒருவருக்கு 2.88 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத்தவிர குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் இழப்பீடும் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.