நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதன்படி, திமுக, அதிமுக, நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ராணுவத்தை பயன்படுத்தி வருவதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘டெல்லி பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். எனவே பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக பிரதமர் மோடி கூறிய விமர்சனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் அளித்துள்ள புகாரில், ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.