கர்நாடகாவில் 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்று போட்டி நிலவி வருகிறது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்தான் முதல்வராக வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இதனிடையே பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கார்கே இருவரிடமும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் ராகுல் காந்தியை இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து குழப்பம் நிலவி வரும் நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் தெரிவிக்கப்படும். கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு தொடர்பாக வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பா.ஜ.க.வால் பரப்பப்படும் வதந்திகளையோ, யூகத்தின் அடிப்படையிலோ செய்திகளை வெளியிட வேண்டாம். கர்நாடகாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்” என்றார்.