பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை வழியாக திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி மேற்கொண்டார். இதில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பரசவராஜ் பொம்மை ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பெங்களூருவில் மெட்ரோ புதிய ரயில் பாதையை மோடி திறந்து வைத்தார்.
தாவணகெரே பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவின் வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. இதற்கு தான் காரணம் அல்ல மக்கள் அளித்த வாக்குகள் தான் காரணம். மக்கள் தங்களுடைய வாக்கின் வலிமையை உணர வேண்டும். கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சிபெற வேண்டும். அது கூட்டணி அரசுகளால் சாத்தியமில்லை. தனி பெரும்பான்மையுடன் கூடிய வலிமையான அரசால் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டு வர முடியும். கர்நாடகாவின் வளர்ச்சிக்காக தங்களின் கட்சி பாடுபடும் நிலையில் இந்த மாநிலத்தை தங்கள் கட்சிக்காரர்களின் ஏடிஎம்-ஆக காங்கிரஸ் கருதுகிறது''என்றார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.