ஆந்திரப் பிரதேசத்தில் மகளின் திருமணத்திற்காக சேர்ந்து வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான் அரித்துவிட்ட சோக சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிமூலம் லஷ்மணா. இவர் அந்த பகுதியில் உள்ள தனது சொந்த இடத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திருமண வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே ஆதிமூலம் லஷ்மணா, தனது மகளின் திருமண செலவிற்காக தனக்கு கிடைக்கும் பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து சேமித்து வந்திருந்தார். அதில் அவர் சுமார் 2 லட்ச ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று (17-11-23) தான் சேமித்து வைத்திருந்த பணத்தை பார்ப்பதற்காக அந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, அந்த பணம் முழுவதும் கரையான்களால் அரித்துவிட்டு கந்தல் கந்தல்களாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வேதனை அடைந்துள்ளார். இதனையடுத்து லஷ்மணா, ‘தான் அறியாமையினால் இந்த பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து நஷ்டமடைந்துள்ளேன். அதனால், எனது நிலையை புரிந்துகொண்டு தனது மகளின் திருமணத்திற்கு அரசு உதவி புரிய வேண்டும்’ என்று ஆந்திரப் பிரதேச அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணம் கரையான்களால் அரித்துவிட்ட சம்பவம் அந்த பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.