Skip to main content

கொல்கத்தாவில் வானில் பறந்த சீன இளைஞரின் ட்ரோன்... கைது செய்த காவல்துறை...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

நேற்று மாலை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா மெமோரியல் நினைவுச்சின்ன கட்டிடத்தின் மேலே ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்த சீன இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

victoria memorial

 

சீனாவைச் சேர்ந்த 34 வயதான லய் ஷீவெய் என்பவர் முறையான அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியான விக்டோரியா நினைவு சின்னத்தின் அருகில் ட்ரோன் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். ட்ரோனும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர் யார், எதற்காக இந்தியா வந்தார், அனுமதி வாங்காமல் ட்ரோன் மூலம் அந்த பகுதியில் ஏன் புகைப்படம் எடுத்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட சீன இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர், மார்ச் 25 வரை அவர் போலீசார் காவலில் இருப்பார் என கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.