காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து அன்றைய தினமே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கி இருந்தனர். இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், டெல்லியில் இன்று இந்த வழக்கு தொடர்பாக முத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகியுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கோண்டார். அதே சமயம் கர்நாடக அரசு சார்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் கூட்டி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர்.
இந்நிலையில் போது நீர் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி நீர் திறக்க இயலாது எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.