நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.
மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.