இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பாஜக எம்.பி.யான சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டி இருந்தார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கும் போது குற்றச்செயல்களில் ஈடுபட்ட பயிற்சியாளர்களின் பெயர்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
மேலும், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். களங்கம் நிறைந்த மல்யுத்தக் கூட்டமைப்பு நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு 72 மணிநேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயத்தில் லக்னோவில் நடைபெற இருந்த தேசிய மல்யுத்த வீராங்கனைகளின் பயிற்சி முகாமையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இவ்விவகாரம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ்பூஷன் சரண் சிங், தன்னால் ஒரு வீராங்கனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சொன்னால் கூட, அன்றே தன்னைத் தூக்கிலிடலாம் என்றும், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடியோடு மறுப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார்.