Skip to main content

பீம் ஆர்மி தலைவர் விடுதலை...

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
beem army


ஏப்ரல் 2ஆம் தேதி உபியில் உள்ள சஹரான்பூரில் பீம் ஆர்மி என்ற அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இந்த மாபெரும் ஊர்வலத்தில் அம்பேத்கர் சிலையை பீம் ஆர்மி அமைப்பினர் நிறுவ முயன்றனர். ஆனால், இதை அங்கிருந்த தாக்கூர் சமுகத்தினர் எதிர்க்க, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணமான, பீம் ஆர்மியின் நிறுவனரும் தலைவருமான ராவண் ஜூன் 8-ல் கைது செய்யப்பட்டார். 
 

நவம்பர் 2 ஆம் தேதி ராவணுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் மறுநாள் மீண்டும் கைதான ராவண், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து கடந்த மாதன் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து, ராவணின் தாயார் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். இதை ஏற்று ராவண் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, மேலும் அவரது ஜாமீன் மனு எதிர்ப்பதை உ.பி. அரசு கைவிட்டது. இதனால், நேற்று அதிகாலை 2:40 மணிக்கு ராவண், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நீங்களெல்லாம் குதிரையில் ஏறவே கூடாது’ - பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
the incident that happened to the listed groom for ride a horse in gujarat

குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சடாசனா பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் சவ்தா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று (14-02-24) மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

அந்த திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகனான விகாஸ் சவ்தாவை மணமகன் கோலத்தில் குதிரையில் ஏற்றி, அவருடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குதிரையில் அமர்ந்திருந்த விகாஸின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி அவரை தாக்கியுள்ளார். அங்கு வந்த 4 பேரும் விகாஸ் சவ்தாவை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விகாஸ் சவ்தா படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், ‘எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனை தாக்கி காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் அளிந்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சுமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்; வாயில் செருப்பை வைக்கும்படி துன்புறுத்திய கொடூரச் சம்பவம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

assault on the youth of the list who demanded salary in gujarat

 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபூதி படேல் ராணிபா என்ற இளம்பெண். இவர், மோர்பி என்ற பகுதியில் ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் டைல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நிலேஷ் தால்சானியா (21) என்ற பட்டியலின இளைஞர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதியில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு, ரூ.12,000 மாதச் சம்பளம் தருவதாகக் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி திடீரென்று அவரை பணியில் இருந்து அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் தான் பணியாற்றிய 16 நாட்களுக்குண்டான சம்பளத்தை தருவார்கள் என நிலேஷ் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். இது பற்றி அந்த நிறுவனத்தில் அவர் கேட்டபோது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன் தினம் (22-11-23) தனது சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் பவேஷ் படேல் ஆகியோருடன் நிலேஷ் அந்த நிறுவனத்துக்கு சென்றுள்ளார். 

 

அப்போது, அவர்கள் மூவரையும், விபூதி படேலின் சகோதரர் ஓம் படேல் பெல்டால் தாக்கியதாகவும், உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் வந்த விபூதி படேல், அவர்கள் மூவரையும் நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிலேஷை தனது காலணிகளை காட்டி அதை வாயால் எடுக்க விபூதி படேல் ராணிபா வற்புறுத்தியும், சம்பளம் கேட்டதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நிலேஷ் மற்றும் 2 பேரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், விபூதி படேல் ராணிபா, ஓம் படேல் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.