இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல்வேறு கொள்கைகளைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), தி.மு.க, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட சில கருத்து மோதலால், சில கட்சிகள் தனது சொந்த மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுகின்றன. அந்த வகையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதே போல், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த பேச்சுவார்த்தையில், எந்தவித உடன்படிக்கையும் ஏற்படாததால், திடீரென்று மேற்கு வங்கத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மக்களைவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் உடனான கூட்டணி தற்காலிக கூட்டணி என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆம் ஆத்மி காங்கிரஸுடன் நிரந்தர கூட்டணி வைக்கவில்லை. இப்போதைக்கு பா.ஜ.க.வை தோற்கடித்து, தற்போதைய ஆட்சியின் சர்வாதிகாரத்துக்கும் குண்டர்களுக்கும் முடிவு கட்டுவதே எங்கள் நோக்கம். நாட்டை காப்பாற்றுவது முக்கியம். பா.ஜ.கவை தோற்கடித்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு எங்கெல்லாம் கூட்டணி தேவையோ அங்கெல்லாம் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றாக இணைந்தன. பஞ்சாபில் பா.ஜ.கவுக்கு எந்த நிலையும் இல்லை. அதனால், அங்குக் கூட்டணி வைக்கவில்லை” என்று கூறினார்.