பாஜக தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவராகவும் பதவி வகித்து வருபவர் எச்.டி. குமாரசாமி. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். அப்போது, அவர் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாகக் குமாரசாமிக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கை போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுரங்க முறைகேடு வழக்கில் விசாரணை நடத்தி வரும் ஜி. சந்திரசேகரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகக் குமாரசாமி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூரூ சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது புதியதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குமாரசாமி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.