வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு எழுந்துள்ள அதேசமயம், அடுத்து நடைபெறவுள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில தேர்தல்களை மனதில் வைத்தே இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொங்கலன்று மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, "எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய காட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்படும்" என தெரிவித்திருந்தார்.
தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ளதையடுத்து ராகுல் காந்தி, மதுரை விமான நிலையத்தில் தான் பேசியது தொடர்பான ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்துள்ளதோடு, "நாட்டின் அன்னதாதாக்கள் (விவசாயிகள்) தங்களது சத்தியாகிரகத்தின் மூலம், ஆணவத்தின் தலையைத் தொங்கவைத்துள்ளனர். அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துகள்" என கூறியுள்ளனர்.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரதமரின் அறிவிப்பு குறித்து "அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள். பாஜக உங்களைக் கொடுமையாக நடத்தியதைக் கண்டு நீங்கள் கலவரமடையவில்லை. இது உங்களின் வெற்றி. இந்தப் போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என கூறியுள்ளார்.