பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் ரயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. தசரா விழாவின் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் மக்கள் பதறியடித்து ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஓடியதால், அப்போது வேகமாக வந்த ரயில் மோதி உயிரிழந்தார்கள். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .
ஜோடா பதக்கில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில் ராவண வதத்தின் போது, ராவண உருவபொம்மையில் இருந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் , மக்கள் அலறியடித்து ரயில்வே கேட் நோக்கி ஓடினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தின் அருகே ஏராளமானோர் நின்றிருந்தனர். சிலர் தண்டவாளத்தை கடந்து அந்த பக்கம் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக 27வது ரயில்வே கேட் வழியாக புறநகர் ரயில் எண் 74943 சென்றது. பட்டாசு சத்தத்தினால் ரயில் வந்த சத்தம் மக்களுக்கு கேட்கவில்லை. இதனால், ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற இந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட செய்திகள் வர தற்போது பலி எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ்-மனவாலா இடையே 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.