நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. அதேபோல், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியிருந்தது. மேலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று (24-02-24) டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே, குஜராத், ஹரியானா, கோவா ஆகிய இடங்களுக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மக்களவையில், புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு என 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.
இதனையடுத்து, மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ள குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் போட்டியிடவுள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளது.