பஞ்சகவயம் குறித்து டெல்லி ஐஐடி-க்கு அனுப்பப்பட்ட 50 ஆராய்ச்சி முன்மொழிவுகள்!
டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு, பசுவின் பால், தயிர், சிறுநீர், நெய் மற்றும் சாணத்தைக் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சகவ்யத்தின் பலன்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கான 50 முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முன்மொழிவுகள் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் இருந்து, பஞ்சகவ்யத்தின் அறிவியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி என்ற திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒய்.எஸ்.சௌத்ரி, ‘பஞ்சகவ்யத்தின் அறிவியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி என்ற திட்டத்தின் சார்பில் டெல்லி ஐஐடி-ல் தேசிய அளவிலான ஆலோசனை பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஐஐடி-க்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
பஞ்சகவ்யம் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான பஞ்சகவ்ய ஸ்டீர்ங் குழு ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்காக தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்