தங்கள் பகுதியில் கரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துவிட்டதாக அந்தமான் நிக்கோபார் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால், இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில், கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்ட பகுதியாக மாறியுள்ளது அந்தமான். அந்தமானில் 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த சூழலில், 11 பேரும் குணமடைந்துள்ளதாக அந்தமான் நிக்கோபார் தலைமைச் செயலாளர் சேத்தன் சங்கி அறிவித்துள்ளார்.