தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது.
கிவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் 410 கோடி ரூபாய், ஹல்டியா எனர்ஜி லிமிடெட் 377 கோடி ரூபாய், எஸ்ஸேஸ் சுரங்க நிறுவனம் 225 கோடி ரூபாய், வேதாந்தா நிறுவனம் 401 கோடிரூபாய், பார்தி ஏர்டெல் நிறுவனம் 198 கோடிரூபாய், ஜிண்டால் நிறுவனம் 123 கோடி ரூபாய், டிஎல்எப் நிறுவனம் 130 கோடி ரூபாய், சென்னை கிரீன்ஹூட்ஸ் நிறுவனம் 105 கோடி ரூபாய், எம்கேஜே என்டர்பிரைசஸ் நிறுவனம் 192 கோடி ரூபாய், வெஸ்டன் யு பி பவர் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனம் 220 கோடி ரூபாய், யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 162 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. 187 தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பினர். தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் என தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.