டீ கடையில் சிகரெட்டைப் பற்றவைத்து ஊதித்தள்ளுபவர்களின் பேச்சில் கூட ஒரு இங்கிதம் இருக்கும். தமிழக அமைச்சர்கள் சிலருக்கோ, எந்த இடத்தில் என்ன பேசவேண்டும் என்பதே தெரியவில்லை. அரசியல் நாகரிகமா? கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள் போலும். அப்படி ஒரு கழிசடைப் பேச்சுதான், இன்று மதுரை திருமங்கலம் பகுதிகளில், குடிமராமத்துப் பணிகளைத் துவக்கி வைத்துவிட்டு மைக் பிடித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அமைச்சரின் வரம்புமீறிய பேச்சு இதோ -
“இருந்து பார்த்தாங்க.. அப்புறம் செய்தி கிடைக்கல. அவனவன் வீட்டுக்கு போயிட்டான். இருந்தா என்ன? இல்லாட்டினா என்ன? நான் எதைச் சொல்லுறேன்னு தெரியாது. இருந்தாலும், நீங்க புரிஞ்சவங்க புரிஞ்சிக்கங்க. புரியாதவங்க வச்சிக்கங்க. இருக்கிறது இருக்கிற மாதிரிதானே இருக்கும். அவன் சொல்லுறான். பேட்டியில சொல்லுறான். ஓய்வெடுக்கிறாருன்னு. அவரு என்ன ஓடிக்கிட்டா இருந்தாரு. அவரு ஏற்கனவே ஓய்வெடுத்துக்கிட்டுத்தான் இருக்காரு.
17 மாசத்துல காவேரிய கொண்டு வந்திருக்கோம். தடுக்கி விழுந்தா எய்ம்ஸ் மருத்துவமனை. இதெல்லாம் சாதாரண காரியமா? இந்தப் பாட்டியெல்லாம் டெல்லிக்கு போயி என்னைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைய பார்க்கிறது? அது ஆயுசு காலத்துல பார்க்க முடியுமா? இங்கே எய்ம்ஸ் மருத்துவமனை வந்துச்சுன்னு வச்சுக்கங்க. இதுக்கு ஒரு பத்து வயசு குறைஞ்சிரும். நடக்க முடியாத கிழவிங்க எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருச்சுன்னா ஓட ஆரம்பிச்சிருவாங்க. அந்த அளவுக்கு அங்கே சிகிச்சை கிடைக்கும்.” என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர் “அமைச்சர் உதயகுமார் லெவலுக்கு என்னால் இறங்கிப் பேச முடியாது. ஆனாலும், மனது கேட்கவில்லை. இவர் யாரை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாரோ? அவருடைய முதுமையை தேர்தல் மேடைகளில் கேலி பேசியபோது, விழுந்து விழுந்து சிரித்தவர் இன்று உயிரோடு இல்லையே? சிகிச்சை என்ற பெயரில், மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதை, அப்போது அறியாமல்தானே இருந்தார்கள் உதயகுமார் போன்றவர்கள்? மருத்துவமனைக்கு வெளியே லட்டு கொடுத்தெல்லாம் ஆனந்தக் கூத்தாடினார்களே? இறுதியில் என்னவாயிற்று? அந்த நேரத்தில், எதிர்க்கட்சியினர் யாரும் ஒரு வார்த்தையாவது அவதூறாகப் பேசியிருப்பார்களா? பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்களை மனிதர்கள் என்றே கருதமுடியாது. காலக்கொடுமை - இத்தகையவர்கள், தமிழகத்தில் அமைச்சர்களாக நடமாடுகிறார்கள்.” என்று வேதனைப்பட்டார்.
தியினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு – குறள் 129
அமைச்சருக்கு மாத்திரமல்ல! நாவடக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானதே!