சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் போல், சென்னையிலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதன் மூலம் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
சென்னை மாங்காட்டைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ரத்தசோகை காரணமாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியிருக்கின்றனர். பிறகு, அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது ரத்தப் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது எச்.ஐ.வி. தொற்று அவருக்கு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவருக்கும் ரத்தம் சோதனை செய்தபோது. எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறாது.
இதுகுறித்து, அந்தப் பெண் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பதிவுத்தபால் மூலம் புகார் அனுப்பியிருக்கிறார். அரசுத் தரப்பிலோ, அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும், அரசு மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து வழங்கி வருகின்றனர்.
செப்டம்பர் 15-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கும் எச்.ஐ.வி. தோற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, தாய்ப்பால் கொடுப்பதற்கு அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை. புட்டிப்பால் மூலம் அந்தப் பெண், தன் குழந்தையை வளர்த்து வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்..” என்று கூறியிருக்கிறார். நவம்பர் 2-ஆம் தேதியே புகார் அனுப்பப்பட்டு, கடந்த 4 மாதங்களாக அந்தப் பெண்ணுக்கு கூட்டு மருந்து வழங்கி வருவதை அறியாதவராகவா இருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்?
.எச்.ஐ.வி. பூதம் இன்னும் எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் இருந்து கிளம்பியிருக்கிறதோ? அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களெல்லாம் பீதியில் உள்ளனர்.