நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை அறிவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை (மார்ச் 31) காலை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்யை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கமாறு வைகோ கூறினார்.
மருத்துவமனையில் ரவி சிகிச்சை பெறும்போது அவரை வைகோ சந்தித்தார். அப்போது ரவியிடம் பேசிய வைகோ, விரும்பி காதல் திருமணம் பண்ணுன. உன் மனைவி, பிள்ளைகளை நினைச்சியா நீ, நாட்டுக்கு போராடலாம் எவ்வளவோ, மனைவி, ரெண்டு பையன்கள, என்னைய, என்னால எப்படியா இத தாங்க முடியும் என அழுதார்.
இந்த நிலையில் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று அரசு மருத்துவமனைக்கு வந்து ரவியின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் ஆரூயிர் தம்பி ரவியின் மறைவு வேதனை தருகிறது. என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு போய் விட்டான். அவன் தீயில் எரிந்தது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயண விழா மேடையில் நான் அமர்ந்திருந்த போது யாரோ ஒருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி சிகரெட் லைட்டரால் தீ வைக்க முயன்றது எனக்கு சி.சி.டி.வி. வாயிலாக தெரிந்தது. உடனடியாக நான் தொண்டர்களிடம் அவரை காப்பாற்றுங்கள் என்று சொன்னேன்.
சிகரெட் லைட்டர் எரியாததால் தீப்பெட்டியால் ரவி பற்ற வைத்துள்ளார். அது பனைமரம் உயரத்துக்கு எரிந்தது.
“வாழ வேண்டிய வயதில் என்னடா இப்படி பண்ணிட்டியே”ன்னு அவனிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் நாட்டுக்காக போராடுகிறீர்கள். உங்களுடைய சேவையுடன் ஒப்பிடுகையில் நான் செய்தது சிறிய தியாகம் தானே என்று சொன்னான்.
உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். நேரிலும் சென்று பார்த்தேன். அப்போது மரண வாக்குமூலம் வாங்க நீதிபதியும் வந்திருந்தார்.
“என்னை யாரும் தீக்குளிக்க தூண்டவில்லை. நானே சுயமாக எடுத்த முடிவு இது. தமிழ்நாட்டை மோடி சுடுகாடாக ஆக்கப்பார்க்கிறார். நியூட்ரினோ திட்டம் தேனி மாவட்டத்துக்கு வரக்கூடாது” என்று மரண வாக்குமூலம் தந்தார்.
அப்போது நான் கடைசியாக உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். என் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்றார்.
நான் அவற்றை செய்து விடுவேன். ஆனால் தந்தையை இழந்து வாடும் பிள்ளைகள், அப்பா எங்கே என்று கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன்?
ரவி கடைசியாக என்னிடம் பேசும்போது, என் உயிர்ப்பலி வாயிலாக உங்களது நடைபயணத்திற்கு ஒரு ஊக்கம் கிடைக்கும் என்று சொன்னது என் நினைவுகளில் அலை மோதுகிறது.
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அவன் வைத்த தீப்பொறி என் இதயத்தில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.
ம.தி. மு.க. தொண்டர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் இனிமேல் யாரும் தீக்குளிக்கவோ, உயிர்ப்பலி செய்வதோ கூடாது என்று கூறி வைகோ கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் பிறகு சிவகாசிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரவியின் உடலுடன் வைகோவும் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, உசிலம்பட்டியில் இருந்து அவர் நடைபயணத்தை தொடங்குகிறார்.