18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும், அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கப்படுகிறது. புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? 50 சதவிகித வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் 100 சதவிகித வெற்றி கிடைக்கும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 21 பேரும் ஒன்றாகத்தான் உள்ளோம். நானே போங்கள் என்று சொன்னாலும், 18 பேரும் என்னைவிட்டு போக மாட்டார்கள். தகுதி நீக்கம் என்று தீர்ப்பு வந்தாலும் 18 பேரும் என்னுடன் தான் இருப்பார்கள். அவர்களின் முடிவே எனது முடிவு. பணத்துக்காகவோ, சொத்துக்காகவோ தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் என்னுடன் இல்லை.
மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது. தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.