தூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் வல்லுநர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் மக்கள் தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தங்கள் வாழ்வுரிமைக்காகவும் மேற்கொண்ட போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது கவலையளிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை மேற்கொண்டு, மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு நிறுவனத்துக்காக மனித உரிமைகள் ஒருபோதும் நசுக்கப்படக் கூடாது. ஐக்கியநாடுகள் சபை அனைத்து நிறுவனங்களுக்கும் எப்படி செயல்பட வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு நிறுவனமும் மனித உரிமையை மதித்து நடக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் தங்களது ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கும்பட்சத்தில் இந்திய அரசு, அனைத்து விதமான சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுகிறதா என்று சோதனை செய்த பின்புதான் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.