நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.