இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தி.மு.க கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில், பல தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கினர். அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மும்முனை போட்டி கொண்ட விருதுநகர் மக்களவைத் தொகுதியில், மாணிக்கம் தாகூருக்கும், விஜய பிரபாகரனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. 10 மணி நிலவரப்படி, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூரை பின்னடைவுக்கு தள்ளியுள்ளார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 9,022 வாக்குகள் பெரும் பின்னடைவாக உள்ளார். ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டி, நடிகர் சரத்குமார் நேற்று விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், 4 சுற்று நிலவரப்படி, சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 9803 வாக்குகள் பெற்று , தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரையும், பா.ஜ.க வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதே நேரத்தில், திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர் துரை வைகோ, 26,186 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க கூட்டணியில் இருந்து கொண்டு சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் 4 சுற்று நிலவரப்படி, ஓ.பன்னீர்செல்வம் 3994 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் முஸ்லீக் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி 7,572 வாக்குகள் பெற்று ஓ.பன்னீர்செல்வத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 24,986 வாக்குகள் பெற்றும், நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா 24,110 வாக்குகள் பெற்றும் முன்னிலை வகித்து வருகின்றனர். கோவை தொகுதியை பொறுத்தவரை பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் 40,928 வாக்குகள் பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 62,995 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தற்போதைய பா.ஜ.க தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், 4 சுற்று நிலவரப்படி 14,745 வாக்குகள் கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார்.