76வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். அதோடு பாதுகாப்பு படை வீரர்கள் மற்ற்றும் காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார்.
அதேபோன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.