புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் மூத்த அரசியல்வாதி வெ.பாலன் (67). மில் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய பாலன், தொழிற்சங்கவாதியாக பரிணாமித்து, இளைஞர் காங்கிரஸ் தலைவராக வளர்ச்சி அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆரம்பிக்க காரணகர்த்தாகவும், அவருக்கு கடைசி வரை நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கியவர். அதனாலேயே என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் இருந்தார். ரங்கசாமி ஆட்சியின்போது நியமன எம்.எல்.ஏவாகவும், பாப்ஸ்கோ வாரிய தலைவராகவும் இருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தார்.
தேசியவாதியான இவர் தேசத்தலைவர்கள் மீதும், காமராஜர் மீதும் அளவற்ற பாசம் கொண்டவர். அதனாலேயே கடந்த ஜூலை 15-ஆம் தேதியன்று காமராஜர் பிறந்த நாளை இந்த கரோனா காலக்கட்டத்திலும் கொடியேற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி விமர்சையாக கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் யாரிடமிருந்தோ கரோனா தொற்று இவருக்கு தொற்றி கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கரோனா தொற்று உறுதியானதையடுத்து புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (28.07.2020) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.