கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (11/05/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பிரதமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆலோசனையில் பங்கேற்ற அனைத்து மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கில் சில தளர்வுகள் குறித்தும் பிரதமருடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்தது.
இந்த நிலையில் இன்றிரவு 08.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். ஊரடங்கு தளர்வு, தொழிற்சாலைகள் இயங்குவதும் பற்றி பிரதமர் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.