Skip to main content

தமிழிசை மீது வழக்குபதிவு செய்ய உத்தரவு : சோபியா வழக்கில் நீதிபதி அதிரடி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
சொ

 

மாணவி சோபியாவை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய என்று காவல்துறைக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு செய்து நவம்பர் 20ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரது இருக்கையின் அருகே பெற்றோருடன் அமர்ந்திருந்த கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பயின்று வரும், தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா(வயது23), தமிழிசையை பார்த்ததும், ’பாசிச பா.ஜ. ஒழிக’ என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  தமிழிசைக்கும், மாணவி சோபியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழிசை, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியனிடம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, அவரை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்தார்.

 

இதன் பின்னர்,  தமிழிசை உள்ளிட்ட 10 பேர், சோபியாவை தூத்துக்குடி விமான நிலையத்தில் மிரட்டியதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த செப்டம்பர் 3ம் தேதி புதுக்கோட்டை போலீசிலும், 14ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடமும் சோபியாவின் தந்தை சாமி புகார் அளித்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் சார்பில் வழக்கறிஞர்கள் அதிசயகுமார், சந்தனசேகர், செந்தில்குமார், திலீபன் உள்ளிட்டோர்  தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் 10 பேர் மீது சட்டப் பிரிவுகள் 341, 294(பி), 506 (1) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்  மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி.

 

இந்த வழக்கில் விசாரணையை அடுத்து இன்று, தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் விமர்சனமும் ஆளுநர் தமிழிசையின் கருத்தும்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

governor tamilisai soundararajan talks about cm mk stalin speech

 

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க தமிழக அரசு  இடைக்கால மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்கால மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆறு மாத கால இடைவெளியில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதம் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் தற்போது திருப்பி அனுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என பேசி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். 

 

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், " இஎஸ்ஐ மருத்துவமனைக்கும் எனக்குமான பந்தம் கடந்த 35 ஆண்டு காலமாக உள்ளது. இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சேவை புரிந்துள்ளேன். சுமார் 66 லட்சம் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை சேவை புரிந்து கொண்டுள்ளது. படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் என அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் இங்கு உள்ளன. நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இந்திய முழுவதும் 9 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

மருத்துவர்களுக்கு இதயம்  இருப்பது போலத்தான் ஆளுநர்களுக்கும் இதயம் இருக்கிறது. ஆளுநர்களுக்கு வாய், காது இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது" என்று பேசினார். 

 

 

Next Story

வேளாண் விழா 2023; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

puducherry vegetable flower and fruit exhibition 

 

புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33வது காய்கனி மற்றும் மலர் கண்காட்சி முதலியார்பேட்டை ஏ.எப்.டி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில், பென்குயின், சிங்கம் மற்றும் பூக்களாலான நீரூற்று, யானை மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரச் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் 35,000 எண்ணிக்கையில் அடங்கிய சால்வியா, சாமந்தி, சினியா, பெட்டுனியா, டொரேன்னியா, காலண்டுலா, டையான்தஸ் மற்றும் தாலியா போன்ற மலர்ச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று மூலிகை செடிகளான பேய் விரட்டி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, யானை திப்பிலி, பின்னை, மருதாணி, காட்டு துளசி, திருநீற்றுப் பச்சிலை, குட்டி பலா, கருஊமத்தை, காட்டு வெற்றிலை, தவசி கீரை உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 

திராட்சையால் உருவாக்கப்பட்ட காளை மாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர.பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. மேலும், அன்னாசி பழ முதலை, மாம்பழ மீன்கள், பூசணிக்காய் கத்தரிக்காய் மயில், பாகற்காய் டைனோசர் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், காகிதத்தால் ஆன பொம்மைகள், பனை மட்டை மற்றும் தென்னை மட்டை, சுரக்குடுவையாலான கலை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. 

 

மேலும் சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட ரங்கோலி கோலங்கள், உழவன் ஏர் ஓட்டுவது போன்ற படங்கள் மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு, தலைவர்கள் சிலைகள், நடவு நடுவது ஆகியவற்றையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இதில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறையில் உள்ள புதிய வகை விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்களும் வெளியூர் பார்வையாளர்களும் வந்து கண்டு ரசித்து தமக்கு பிடித்த மலர்ச்செடிகளை வாங்கிச் சென்றனர். மேலும், பார்வையாளர்கள் கண்காட்சியை ரசித்ததோடு குடும்பத்துடன் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். நிறைவு விழாவில் அதிக பரிசுகள் பெறும் நபருக்கு ஆண்கள் பிரிவில் காய்கனி ராஜா என்ற பட்டமும், பெண்கள் பிரிவில் அதிக பரிசுகள் பெறும் பெண்களுக்கு மலர் ராணி மற்றும் காய்கறி ராணி போன்ற பட்டங்களும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.